வவுனியாவில் போலீஸ் மோட்டார் சைக்கிளை திருடிய கில்லாடி திருடன்...

வவுனியாவில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் குருமன்காட்டு சந்தியில் நிறுத்தி வைத்திருந்த பொலிசாரின் மோட்டார் சைக்கிளை இனந்தெரியாத நபர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளை வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்று மீண்டும் திரும்பிய வந்த சமயத்தில் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து பொலிஸார் கடமையில் இருந்தபோதும் இவ்வாறு மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகேயிருந்த நபரிடம் விசாரித்த போது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற நபர் தலைக்கவசம் அணியாது சென்றதாகவும் இவ்விடயம் தொடர்பில் அருகே கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸாருக்குதெரிவித்ததாகவும் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.