Trending News...

மற்றுமொரு மாணவி இலங்கையில் கொடூரமாக வெட்டி கொலை!

இறக்குவானை, படேயாய பகுதியில் உயர்தரத்தில் கற்று வந்த மாணவி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல மேலதிக நீதவான சரத் விஜேகுணவர்தன் உத்தரவிட்டுள்ளார்.

படேயாய பகுதியை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மாணவி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில், தந்தையுடனேயே இந்த மாணவி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் உயர்தரம் கற்றுவந்த மாணவி வித்தியாவும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை தற்போது "ட்ரயலட் பார்" முறையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இறக்குவாணை பகுதியில் உயர்தரம் கற்றுவரும் குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.