Trending News...

கள்ளக்காதல் விவகாரத்தில் பூ வியாபாரி கொன்று புதைப்பு!!!!

ஆவடி ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது38). ஆவடி பூ மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுந்தரம் அதன் பிறகு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் யசோதா பல இடங்களில் தேடினார்.

ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் நேற்று ஆவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் சுந்தரத்திற்கும், அப்பகுதியைச் சேர்ந்த அமுதா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

அமுதாவின் கணவர் இறந்து விட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவருடன் சுந்தரம் நெருங்கி பழகி வந்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு அமுதா, சுந்தரத்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரிடமிருந்து விலகினார்.

இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரம் அவரிடம் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தகராறு செய்தார்.

மேலும் அமுதாவுக்கும், அப்பகுதியைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் திவானுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொந்தளித்த சுந்தரம் தன்னிடம் பழகுமாறு தொடர்ந்து அமுதாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதுபற்றி அறிந்த திவான் அவரது நண்பர் கோபி ஆகிய 2 பேர் சுந்தரத்தை கண்டித்துள்ளனர்.

இதனால் சுந்தரம் அமுதாவின் உறவினர் ராஜேஸ்வரியிடம் சென்று அமுதாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். உடனே அவர் சுந்தரத்தை திவானிடம் பேச அழைத்து சென்றார்.

அதன்பிறகு சுந்தரத்தை திவான், கோபி இருவரும் தனியாக அழைத்து சென்று கொலை செய்து உள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் திவான் வீட்டுக்கு சென்று அவரது தாய் ரகிமாகனியிடம் விசாரித்தபோது, தன் மகன் வீட்டில் தரை தோண்டியதாகவும் பின்னர் அதை சிமெண்டு போட்டு மூடியதாகவும், அதன் பிறகு அவன் மாயமாகி விட்டதாகவும் கூறினார்.

இதனால் சுந்தரத்தை கொலை செய்து உடலை வீட்டுக்குள் பள்ளம் தோண்டி புதைத்து விட்டு திவானும், கோபியும் தப்பி விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் வீட்டுக்குள் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து ராஜேஸ்வரி, அமுதாவிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. திவான், கோபியை போலீசார் தேடி வருகிறார்கள்.