Trending News...

இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம்.(video)

விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும்.

இருந்தாலும், விநாயகர் இறைச்சி உண்பதாக யாராவது கேள்விப்பட்டதுண்டா? ஆனால் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு விளம்பரத்தில், விநாயகர் இறைச்சி சாப்பிடுவதுபோல் சித்தரிக்கப்படுள்ளது, இந்து சமூகத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தி, கடுமையான எதிர்ப்புகளை எழுப்பியிருக்கிறது.

அந்த விளம்பரத்தை அகற்ற வேண்டும் என்று விளம்பர நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாமிசம் மற்றும் கால்நடை ஆஸ்திரேலியா' (Meat and livestock Australia) நிறுவனம் செப்டம்பர் நான்காம் தேதியன்று வெளியிட்ட விளம்பரமே சர்ச்சைகளின் மூலாதாரம். இந்த நிறுவனம், இறைச்சி மற்றும் விலங்குகள் தொடர்பான சந்தை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.

த மீட் மோர் பீபிள் கேன் ஈட், யூ நெவர் லேம்ப் அலோன்' (The meat more people can eat, you never lamb alone), என்ற வாசகம் இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது, அதிக அளவிலான மக்கள் ஆட்டிறைச்சியை உண்பதால் நீங்கள் தனித்து விடப்படமாட்டீர்கள் என்ற பொருளில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில், விநாயகர், இயேசு, புத்தர், தோர் மற்றும் சீனாவின் குவானியன் என பல்வேறு மதங்களின் தெய்வங்கள் மற்றும் புராண கதைமாந்தர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதை காணலாம்.

இதுபற்றி சமூக ஊடகங்களில் பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்களும் எதிர்வினைகளும் உலா வருகின்றன.

தன்மய் ஷங்கரின் கருத்து இது, ''ஹபீபுக்கு பிறகு, இப்போது ஆஸ்திரேலியாவில் மீட் அண்ட் லைவ்ஸ்டாக், விநாயகர் இறைச்சி சாப்பிடுவதாகவும், மது அருந்துவதாகவும் காட்டுகிறது. இந்து மத தெய்வங்களை சீண்டிப்பார்ப்பது இப்போது நாகரீகமாகிவிட்டது.''

அடிலைடில் வசிக்கும் உமங்க் படேல் பிபிசியிடம் பேசுகையில், ''இந்த விளம்பரம் எனக்கு பிடிக்கவேயில்லை, இது வெறும் பிதற்றல்'' என்று கூறுகிறார்

இண்டியன் சொசைட்டி ஆஃப் வெஸ்டர்ன் ஆஸ்ட்ரேலியா (ISWA) வின் செய்தித் தொடர்பாளர் நிதின் வஸிஷ்ட் தெரிவிக்கும் கருத்து இது, "இந்த விளம்பரத்தை அகற்றவேண்டும் என்று கோரும் கடிதத்தை ஆஸ்திரேலியாவின் விளம்பர நியமங்கள் முகமை அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். விநாயகரை இப்படி சித்தரித்திருப்பது இந்து மதத்தினரின் மத உணர்வுகளை காயப்படுத்துகிறது."

விளம்பர நிறுவனம் சற்று கவனமாக ஆராய்ந்திருந்தால், விநாயகருக்கு மாமிசத்தை படைப்பது தடை செய்யப்பட்டது என்பதை தெரிந்துகொண்டிருக்கலாம் என்று கூறுகிறார். அவர்கள் வணிக லாபங்களுக்காக ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கிறார்கள், இதை எந்தவிதத்திலும் சரி என்று சொல்லமுடியாது என்று அவர் கூறுகிறார்

இந்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்கிறார் மதுலிகா, "இந்த விளம்பரம் மிகவும் ஆட்சேபணைக்குரியது. விநாயகர் மாமிசம் உண்பதாகவும், மது அருந்துவதாகவும் காட்டப்பட்டுள்ளது, மேடம் சுஷ்மா ஸ்வராஜ், இந்த அத்துமீறல் மீது நடவடிக்கை எடுங்கள்".

இந்த விளம்பரத்தில் தவறு எதுவும் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். மெல்பர்னில் வசிக்கும் செஜல் ஜாம் கூறுகிறார், 'இதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை இந்த விளம்பரம் காட்டுகிறது. ஆனைமுகனை வணங்குபவர்கள் ஆட்டுக்குட்டியையும் சாப்பிடுகிறார்கள்.

உஜாஸ் பாண்ட்யாவும் இதே போன்ற கருத்தையே சொல்கிறார், 'ஆஸ்திரேலியாவில் நீண்டகாலமாக வசிக்கும் மக்கள் இந்த விளம்பரத்தை பெரிதாகவே எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள், ஏன், பார்த்திருக்கவே மாட்டார்கள்'.

நிறுவனத்தின் மார்கெடிங் மேனேஜர் ஆண்ட்ரூ ஹோவியின் கருத்துப்படி, 'நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஆட்டிறைச்சியை சாப்பிடலாம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம்'.

''பல தசாப்தங்களாக முயற்சிகள் மேற்கொண்டு ஆட்டிறைச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெற்றி கண்டோம். அந்த வெற்றியைக் கொண்டாட கடவுள்களும், புராண கதை மாந்தர்களும்கூட ஆட்டிறைச்சியை உண்பதாக காட்டுவது சரியாக இருக்கும் என்று நினைத்தோம். இதை விட மிகச் சிறப்பாக எங்கள் வெற்றியை எப்படி உணரவைப்பது? என்று கேள்வி எழுப்புகிறார் ஆண்ட்ரூ ஹோவி.