சிறுமியை காப்பாற்ற மர்மநபரொருவர் ஒருவர் செய்த விசித்திரக் கொலை…!

வாலிபர் ஒருவரை கோடாரியால் கடுமையாக தாக்கி மண்ணெண்ணை ஊற்றி எரித்துவிட்டு லவ் ஜிகாத்தில் இருந்து சிறுமியை காப்பாற்ற இப்படி செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் முகமது பட்டா சேக். இவர் ராஜஸ்தானில் தங்கி பணி புரிந்ததாக தெரிகிறது. முகமதுவை ஒருவர் கோடாரியால் கடுமையாக தாக்கி பின்னர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சாமண்ட் மாவட்டத்தில் தேவ் ரோட்டில் உள்ள ராஜ்நகரில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து கோடாரி மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீஸார் கைப்பற்றினர்.

இதுகுறித்து ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவில் ஒருவர், முகமதுவை கோடாரியை கொண்டு வெட்டுகிறார். உடலில் பல்வேறு இடங்களில் கோடாரியால் வெட்டுகிறார்.

தாக்குதலுக்குள்ளான முகமது தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார். மீண்டும் தொடர்ந்து அந்த நபர் தாக்குகிறார். இதனை மற்றொருவர் வீடியோ பதிவு செய்கிறார். தாக்குதலுக்குள்ளான முகமது மயக்கமடைந்து கீழே விழுகிறார்.

பின்னர் அவர் மீது அந்த நபர் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரிக்கிறார். இந்தக் கொடூர காட்சியை முழுமையாக படம் பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மற்றோரு வீடியோவை பதிவிட்ட அந்த நபர் அதில் லவ் ஜிகாதில் இருந்து சிறுமியை காப்பாற்றவே இப்படி செய்ததாக தனது குற்றத்தை நியாயப்படுத்தி ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி ஷம்பூநாத் ரைகேர் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.