உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

20 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த இந்திய வீரர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சாஹா, உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் 20 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக கொல்கத்தாவில் ஜெ.சி.முகர்ஜி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மோஹூன் பாகன் மற்றும் பி.என்.ஆர் ரீக்ரியேஷன் கிளப் அணிகள் நேற்று மோதின.

முதலில் களமிறங்கிய பி.என்.ஆர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர், ஆடிய மோஹூன் பாகன் அணி 7 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 152 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய விருத்திமான் சாஹா, 20 பந்துகளிலேயே சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்தார்.

12 பந்துகளில் அரைசதம் கண்ட சாஹா, அடுத்த 8 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார். இதில் 14 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சாஹாவின் Strike rate 510.00 ஆகும். மேலும், 4 கேட்ச் மற்றும் ஒரு ரன்-அவுட்டையும் சாஹா நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனை குறித்து 33 வயதான சாஹா கூறுகையில்,

‘இது சாதனையா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நான் இங்கு வித்தியாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். முதல் பந்தை சந்தித்தவுடனேயே அதிரடியாக ஆட முடிவு செய்துவிட்டேன்.

வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். மற்றவை அணித் தேர்வாளர்களிடம் தான் உள்ளது. டி20 போட்டியைப் பொறுத்தவரையில், துவக்க வீரராக களமிறங்கவே விரும்புகிறேன்.

ஆனால், சன்ரைஸர்ஸ் அணியில் தவான் மற்றும் வார்னர் உள்ளனர். எனவே, எந்த இடத்திலும் களமிறங்க தயாராக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.