வண்ணங்களின் திருவிழா: ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

வசந்த காலத்தை வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி அன்று தங்களது துன்பங்கள் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். இந்தநிலையில் ஹோலி கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

மும்பையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மரக்கட்டை, வைக்கோல், மாட்டு சாணம் மற்றும் பழைய பொருட்களால் வீதிகளில் ஹோலிகா அரக்கியை அமைத்து எரித்தனர். மேலும் தங்கள் வீடுகளில் பூஜை செய்த தேங்காயை எடுத்து வந்து ஹோலிகாவின் சிதையில் எறிந்தனர். பின்னர் அவர்கள் அதை சுற்றிவந்து இறைவனை வழிபட்டனர்.

இவ்வாறு செய்தால் தீயில் எரியும் தேங்காயுடன் துன்பங்களும், தங்களிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களும் அழியும் என மக்கள் நம்புகின்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் இரவில் பூரன்போலி உள்ளிட்ட இனிப்பு வகைகளை தங்களது வீடுகளில் தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நேற்று உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக குடிசைப்பகுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்டியது. எங்கும் பொதுமக்கள் வண்ணப் பொடிகள் பூசப்பட்ட முகங்களுடன் சுற்றித்திரிந்தனர். பலர் அடையாளம் தெரியாத அளவிற்கு வண்ணப்பொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தனர். ஒரு சிலர் உடல் முழுவதும் பெயிண்ட் அடித்து கொண்டு வேற்றுகிரகவாசிகள் போல மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்தனர்.

இதேபோல தாதர், ஜூகு, கிர்காவ், மெரின் டிரைவ் போன்ற கடற்கரை பகுதிகளிலும் ஹோலியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சில இடங்களில் நடந்த கொண்டாட்டங்களில் வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். ஹோலி கொண்டாட்டத்தால் நேற்று மும்பை நகரமே வண்ணமயமாகி இருந்தது. பல இடங்களில் அதிக திறன்கொண்ட ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கவிட்டு உற்சாக நடனமாடினர்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் காரணமாக பல இடங்களில் சினிமா துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதேபோல பல பிரபலங்களும் தங்கள் வீடுகளில் ஹோலி கொண்டாட்டங்களை தவிர்த்து இருந்தனர். எனினும் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடிய படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

ஹோலியையொட்டி நேற்று மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதுகுடித்துவிட்டு மோட்டார் சைக்கிள், கார்களில் செல்பவர்களை பிடிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதேபோல மின்சார ரெயில் பயணிகள் மீது தண்ணீர் பலூன்கள் அடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க ரெயில்வே போலீசார் தண்டவாள ஓரம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

close