உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

என்னுடைய நேர்மை பற்றி கேள்வி எழுகிறது: ஸ்மித் வருத்தம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மஞ்சள் டேப் மூலம் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் கடுமையாக  விமர்த்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, கேப்டவுணில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தென்னாப்பிரிக்க அணி விளையாடி கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் கேமருன் பேன்கிராப்ட், ஏதோ ஒரு மஞ்சள் நிற பொருளை தேவைப்படும்போது வெளியே எடுத்துவிட்டு உள்ளாடைக்குள் போடுவதுமாக இருந்தார்.

இது, கேமராவில் சிக்கியது. பின்னர் அதை குளோசப்பில் பார்த்தால், அந்தப் பொருளை வைத்து அவர் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. அதாவது பந்தில் பளபளப்புக் குறையாமல் இருக்க, அவர் வெளியில் இருந்து கொண்டு வந்த உப்புத்தாளை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. அது மஞ்சள் நிற டேப் என்பது பிறகு தெரிய வந்தது.

பின்னர் இது நடுவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. ’தான் பேன்டில் கருப்பு நிற துணி மட்டுமே வைத்திருந்ததாகக் கூறி, காண்பித்தார். ஆனால், டிவியில் அவர் செயல் காண்பிக்கப்பட்டதால் அவர் கையும் களவுமாகச் சிக்கினார். அவர் பந்தை சேதப்படுத்தியது உறுதியானால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும். ஐ.சி.சி. போட்டி நடுவரின் விசாரணைக்கு பிறகே என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பேன்ன்கிராப்ட் கூறும்போது, ‘நடுவர்களிடம் பேசினேன். என் மீது பந்தை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு சுமத்தி இருக்கிறார்கள்’ என்றார். இதற்கிடையே, இந்த வேலையில் பேன்கிராப்ட் மட்டும் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்றும் பயிற்சியாளர் லேமன், மாற்று வீரர் ஹேன்ஸ்கோப்பும் இதில் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய, ஆஸ்திரேலியா கேப்டன், ஸ்டீவ் ஸ்மித்,  ‘ இதுபற்றி வீரர்களிடம் ஆலோசித்தேன். பேன்கிராஃப்ட்டின் செயல் விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகானது அல்ல. இதற்காக பெருமைபட முடியாது.  வருந்துகிறேன். இதன் மூலம் என் நேர்மை குறித்தும், அணியின் ஒற்றுமை குறித்தும் கேள்விகள் எழுகிறது. இனி இது போன்று நிச்சயம் நடக்காது. அதற்கான உறுதியை என்னால் தர முடியும். இதில் பயிற்சியாளரோ, வேறு வீரர்களோ ஈடுபடவில்லை. நீங்கள் இது தொடர்பாக என்ன கேள்வி கேட்டாலும் என் பதில் இதுதான், ’என் தலைமையில் கீழ் முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறது. இனி நடக்காது’. இந்த சம்பவத்துக்காக நான் கேப்டன் பதவியை இழக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் இதற்கு கேப்டனாக நான் பொறுப்பேற்கிறேன்’ என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் சுழல் பந்துவீச்சாளருமான ஷேன் வார்ன் கூறும்போது, ‘டிவியில் அந்தக் காட்சியை பார்த்ததும் ஏமாற்றமடைந்தேன். இதுபற்றி கேப்டன் ஸ்மித், பயிற்சியாளர் லேமன் ஆகியோர் இதை விளக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ‘ஸ்மித் உள்ளிட்ட அனைவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி ஸ்மித் கூறும்போது, ‘அந்த பொருள் சொரசொரப்பு காகிதம் போன்று இருக்கிறது. அதில் தேய்த்து பந்தின் தன்மையை அவர் மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் நடுவர் பந்தை உடனடியாக மாற்றாதது எனக்கு ஆச்சரியம் அளித்தது’ என்றார்.

இதே போல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஸ்மித் மீது ரபாடா உரசியது, வார்னர்- டீ காக் மோதல், வார்னர் - ரசிகர்கள் மோதல் என தொடர்ந்து நடந்து வரும் பஞ்சாயத்துக்களை அடுத்து, இந்த சர்ச்சை ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.