என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. ஓடிய ரெயில்..

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரெயிலின் ஆறு பெட்டிகள் என்ஜின் இல்லாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் ஒரு சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரெயிலின் கடைசி ஆறு பெட்டிகள் ரெயிலில் இருந்து பிரிந்து தானாக ஓடியுள்ளது. கன்டபடா ரெயில் நிலையத்தில் இருந்து பகனகா ரெயில் நிலையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அந்த ஆறு பெட்டிகளும் பயணம் செய்துள்ளன.

இந்த சம்பவம் உடனடியாக கண்டறியப்பட்டதை அடுத்து பெரிய விபத்து தடுக்கப்பட்டது. ரெயில் பெட்டிகள் இடையேயான இணைப்பில் ஏற்பட்ட சிறிய பாதிப்பின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பகனகா ரெயில் நிலையத்துக்கு வேறு என்ஜின் அனுப்பப்பட்டு பிரிந்து சென்ற ரெயில் பெட்டிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்பின் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்ட பின்னர் ரெயில் மீண்டும் பயணத்தை தொடர்ந்துள்ளது.

கடந்த வாரம் குஜராத்தில் என்ஜின் இணைப்பு கழற்றிவிடப்பட்ட நிலையில் 22 பெட்டிகள் கொண்ட ரெயில் 10 கி.மீ. தூரத்துக்கு பின்னோக்கி சென்ற சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.