ரூ.25 லட்சத்தில் தங்க ஷூக்கள், பளபளக்கும் டை- திருமண விருந்தில் ஜொலித்த பாகிஸ்தான் மணமகன்..

பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் சல்மான் ஷாகித். வர்த்தகரான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி மணமகன் வீட்டில் ‘வலிமா’ எனப்படும் விருந்து நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மணமகன் தங்கத்தினால் ஆன சூட், கற்கள் பதித்த டை மற்றும் தங்க ஷூக்கள் அணிந்திருந்தார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம்.

இவற்றில் மணமகன் சல்மான் ஷாகித் அணிந்திருந்த தங்க ஜரிகை சூட் மட்டும் பாகிஸ்தான் ரூபாயில் 65 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பலவிதமான உலோக கற்களால் ஆன டையின் மதிப்பு 7 லட்சம் ஆகும்.

அதே நேரத்தில் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் 320 கிராம் சுத்த தங்கத்தில் தயாரானவை. அவற்றின் மதிப்பு 17 லட்சம் ரூபாய்.

தங்கத்தினால் ஆன உடை மற்றும் ஷூ அணிந்திருந்த மணமகன் சல்மான் ஷாகித் விழாவில் தகதகவென ஜொலித்தார். அவரை திருமண விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிசயமாக ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இதுகுறித்து சல்மான் சாகித்திடம் கேட்ட போது, “நான் எப்போதும் தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஷூக்கள் அணிவதை தான் விரும்புகிறேன். பொதுவாக மக்கள் தங்கத்தை கழுத்திலும், தலையில் கிரீடமாகவும் அணிகிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணம் மற்றும் சொத்துக்கள் காலில் ஒட்டும் தூசி போன்றது. அது அங்கே (காலுக்கு கீழே) தான் இருக்க வேண்டும் என்றார்.