திருமணத்திற்கு மறுத்ததற்காக ஆசிட் வீசியதில் 3 மாணவிகள் காயம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டாங் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் சகோதரிகள் இருவர் தங்களது தோழியுடன் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர்.  அவர்கள் 3 பேரும் பல்கலை கழக மாணவிகள்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்கள் ஆசிட் வீசியுள்ளனர்.  இதில் அவர்களது முகம் மற்றும் கைகள் எரிந்து போயின.  அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் இரு சகோதரிகளின் மாமா முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார்.  மற்றொரு குற்றவாளி மாமாவின் நண்பர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.  சகோதரிகளில் ஒருவர் மாமாவின் திருமண விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் இந்த தாக்குதல் நடந்திருக்க கூடும் என போலீசார் கூறியுள்ளனர்.  இந்த சம்பவத்தில் 3வது குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கு பற்றிய அறிக்கை ஒன்றை பஞ்சாப் முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ஐ.ஜி. ஆரிப் கேட்டுள்ளனர்.  குற்றவாளிகளை கைது செய்யும்படி மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.