காணாமல் போனவர் 40 ஆண்டுகளுக்கு பிறகு ‘யுடியூப்’ உதவியால் மீட்பு..

மணிப்பூர் மாநிலம் இம்பாலை சேர்ந்தவர் கோம்தான் சிங். கடந்த 1978-ம் ஆண்டு, தன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 26. அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. 40 ஆண்டுகள் கழித்து, ‘யுடியூப்’ உதவியால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

தற்போது 66 வயதாகும் அவர், மும்பையில் நரைத்த தாடி, மீசையுடன் பழைய இந்திப்பாடல்களை பாடி வந்தார். அவரை பெரோஸ் ஷாகிர் என்ற புகைப்படக்காரர் கவனித்தார். அவரைப்பற்றி அறிந்து கொண்டார். அவரை பாட வைத்து வீடியோ எடுத்த அவர், அதை ‘யுடியூப்’ பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவை மணிப்பூரில் கோம்தான் சிங்கின் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து விட்டு, அதை கோம்தான் சிங்கின் குடும்பத்தினரிடம் காட்டினார். இன்ப அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இம்பால் போலீசிடம் முறையிட்டனர். இம்பால் போலீசார், மும்பை போலீசாரை தொடர்பு கொண்டனர். கோம்தான் சிங்கின் இளவயது படத்தை அனுப்பி வைத்தனர்.

அப்படத்தை வைத்து, மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் கோம்தான் சிங்கை போலீசார் அடையாளம் கண்டனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததுடன், மணிப்பூரில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.