புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா?

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி கார் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், புதிய தலைமுறை சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டன் எஸ்யூவி மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

மஹிந்திரா பிராண்டில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவி வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. 2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் வர இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவி 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கும். 8 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

இந்திய சாலைநிலைகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷனில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அத்துடன் கிரவுண்ட் கிளியரன்ஸும் அதிகரிக்கப்படும். க்ரில் மற்றும் பின்புற டெயில் கேட்டுகளில் மஹிந்திரா லட்சினைகள் பொருத்தப்படும்.
 
மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள் இடம்பெற இருக்கிறது. அட்வான்ஸ்டு எமர்ஜென்ஸி பிரேக்கிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம், லேன் டிபார்ச்சர் வார்னிங் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் உள்ளிட்ட எக்கச்சக்கமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.
 
புதிய தலைமுறை சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கிறது. மஹிந்திரா பிராண்டு முத்திரைகளுடன் வர இருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.
 
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ரூ.22 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.