பறக்கும் மின்சார ரெயிலில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றவர் கைது.

சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் பறக்கும் ரெயிலில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் ஷகீலா (வயது 26). (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர், வேளச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு கடற்கரை நோக்கி வரும் பறக்கும் மின்சார ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அவர் பயணித்த பெட்டியில் ஒரு சில பயணிகளும் இருந்தனர். ரெயில் சேப்பாக்கம் வந்தடைந்ததும், இதர பயணிகள் இறங்கினர். ஷகீலா மட்டுமே அந்த பெட்டியில் இருந்தார். அப்போது அந்த ரெயில் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறினார். ரெயில் சிந்தாதிரிப்பேட்டையில் நின்று புறப்பட்டபோது ஷகீலா மீது அந்த வாலிபர் திடீரென பாய்ந்து கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷகீலா ‘காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’, என கூச்சலிட்டார்.

ஓடும் ரெயிலில் பெண்ணின் அபாய குரலை கேட்டு, அதே ரெயிலில் மற்றொரு பெட்டியில் பயணித்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் காரர் சிவாஜி அதிர்ச்சி அடைந்தார். பார்க் டவுன் ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. இதை பயன்படுத்தி, தான் இருந்த ரெயில் பெட்டியில் இருந்து குதித்து பெண்ணின் சத்தம் வந்த ரெயில் பெட்டியில் சிவாஜி தாவி ஏறினார்.

அங்கு ஒரு இளம்பெண்ணை, வாலிபர் கற் பழிக்க முயற்சி செய்ததை பார்த்து சிவாஜி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தார். எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து போன அந்த வாலிபர் பெட்டியில் சரிந்து விழுந்தார். அதேநேரம் உதடு மற்றும் முகத்தில் காயம் அடைந்த ஷகீலாவும் மயக்கநிலைக்கு சென்றார்.

மின்சார ரெயில் கடற்கரை ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் ஷகீலாவையும், அந்த வாலிபரையும் கடற்கரை ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் சிவாஜி ஒப்படைத்தார். உடனடியாக ஷகீலாவை, பாதுகாப்புப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு எழும்பூர் தாய்-சேய் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் போலீசார் விசாரணையில், ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்த வாலிபர் சத்தியராஜ் (26) என்பதும், எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. வேளச்சேரி லட்சுமிபுரத்தை சேர்ந்த அவர், எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோஜா, சத்தியராஜ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேற்று காலை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தார். அங்கு ஷகீலாவை சரியான நேரத்தில் காப்பாற்றிய பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சிவாஜியை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

பின்னர் பொன்மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் சிவாஜியால் ஒரு பெண்ணின் உயிரும், மானமும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மனநிலை சரியில்லாதவர் என்று கூறுவது தவறு. விசாரணையின்போது, அந்த பெண்ணிடம் 45 நிமிடங்கள் பேசினேன். ‘என்னை கற்பழிக்க முயற்சித்தவன் ஒரு காம கொடூரன். அவனை விடக்கூடாது, தூக்கில் போடவேண்டும். இந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீண்டுவர வேண்டும்’, என்று என்னிடம் அவர் தெளிவாக தெரிவித்தார். இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்துவதில் காலதாமதம் செய்வதாக சொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிப்பதே முக்கியமாக இருந்ததால், போலீஸ் நிலையத்தில் தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் உரிய அறிவுரைகளை போலீசாருக்கு வழங்கி இருக்கிறோம்.

ஓரிரு நாளில் போலீஸ் அறிக்கை தயார் செய்து கோர்ட்டுக்கு அனுப்பப்படும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை நிச்சயம் வழங்கப்படும்.

முதலில் பயணிகளுக்கு சுய பாதுகாப்பு முக்கியம். பாதிக்கப்பட்ட அந்த பெண் மகளிர் பெட்டியில் ஏறாமல், பொதுப்பெட்டியில் ஏறியிருக்கிறார். அப்போது சில பயணிகளும் உடன் இருந்துள்ளனர். பேப்பர் படித்துக்கொண்டே வரும்போது அசதியில் அந்த பெண் தூங்கியிருக்கிறார். அப்போது தான் எதிர்பாராத இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ரெயில்வே பாதுகாப்புப்படை சென்னை கோட்ட அதிகாரி லூயிஸ் அமுதன் உடன் இருந்தார்.