Trending News...

பொறுப்பை உணர்ந்து மிரட்டினார் பிராவோ: புகழ்கிறார் தோனி!

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய பிராவோவை, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, பாராட்டியுள்ளார்.

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாண்டு தடைக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய சென்னை அணி, ஒரு பந்து மீதமிருக்கும் போது 169 ரன்களை எடுத்து வெற்றியை ருசித்தது. பிராவோ அதிரடியாக விளையாடி, 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, ’சென்னை - மும்பை போட்டியை பார்க்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஏனென்றால் நாங்கள் இரண்டு வருடத்துக்குப் பிறகு வந்திருக்கிறோம். இந்தப் போட்டியில் பிராவோ, பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்தார். நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்க முடியும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. எந்த ஒரு விளையாட்டிலும் பாசிட்டிவான விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்வேன். இந்தப் போட்டியிலும் அப்படித்தான். முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிச்சியாக இருக்கிறது’ என்றார்.

அதிரடி காட்டிய பிராவோ கூறும்போது, ’ இது சிறந்த வெற்றி. இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். சிஎஸ்கே என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அதைக் காப்பாற்றியிருக்கிறேன் என நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.