மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்தி, துணைவேந்தராக ஆசைப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி..

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை உயர் அதிகாரிகளுக்கு பாலியலுக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலாதேவி கடந்த 2008-ம் ஆண்டு உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.

பொதுவாக மாணவிகள் பேராசிரியையிடம் சகஜமாக பேசுவதை பயன்படுத்திக்கொண்ட நிர்மலாதேவி தன்னிடம் அடிக்கடி சந்திக்கும் மாணவிகளிடம் அவர்களது குடும்பம் மற்றும் முழு பின்னணிகளையும் கேட்டறிவதுடன் அவர்களுக்கு உதவுவதுபோல பாசாங்கு செய்து வந்துள்ளார்.

இதனால் மாணவிகளும் நிர்மலாதேவியின் கனிவான பேச்சுக்கு மயங்கி மிகுந்த நட்புடன் பழகி வந்துள்ளனர். அதை பயன்படுத்திய நிர்மலாதேவி அவர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று அவர்களது வாழ்க்கையையே சீர்குலைக்க வலைவிரித்து விட்டார்.

நிர்மலாதேவியின் வலையில் சிக்காமல் தப்பித்த மாணவிகள் அதனை வெளிஉலகுக்கு தெரியப்படுத்தியதால் நிர்மலாதேவியின் முகமூடி கிழிக்கப்பட்டுள்ளது.

தனது பேராசிரியை பதவி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ள சிலருடன் நட்பில் இருந்துள்ளார் நிர்மலாதேவி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களுக்கு இவரை அழைத்து மேடையில் அமர வைத்தும் அழகுபார்த்துள்ளனர் உயர் அதிகாரிகள். அதற்கான காரணங்கள் குறித்தும் தற்போது விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவிகளிடம் அடிக்கடி நிர்மலாதேவி தான் துணைவேந்தர் ஆவதே ஒரே லட்சியம் என்று கூறி வந்துள்ளார்.

எனவே இந்த உயர் பதவியை அடைவதற்காக மாணவிகளை தவறான வழியில் செல்ல நிர்மலாதேவி அழைத்து இருக்கலாம் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

ஒரு உதவி பேராசிரியை கல்லூரியில் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு அடிக்கடி மதுரைக்கு வந்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சந்தித்து பேசியது பல யூகங்களுக்கு வழி வகுத்தாலும் அவரது நோக்கம் என்ன என்பது விசாரணை குழுவின் இறுதிக்கட்ட விசாரணைக்கு பிறகே தெரியவரும்.

நிர்மலாதேவி போன்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.