மகளைக் கொன்று விட்டு தாய் தற்கொலை..

கேரள மாநிலம் வடக்கஞ்சேரியை சேர்ந்தவர் சேது. இவரது மனைவி ருக்மணி (வயது 62). இவர்களது மகன்கள் சாஜிமோன், சதீஸ் மகள் சசிமோள். மகன்களுக்கு திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் சென்று விட்டனர்.

சசிமோள் (32) பெற்றோருடன் திருப்பூர் தோட்டத்துப்பாளையத்தில் உள்ள ஜி.என். நகரில் வசித்து வந்தார். பெற்றோர் வேலைக்கு சென்று மகளை கவனித்து வந்தனர்.

சசிமோள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வயதான தம்பதி மகளை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு தாயும், மகளும் வீட்டில் இருந்தனர். தந்தை வெளியே சென்று விட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட மகளை பராமரிக்க முடியாத விரக்தியில் இருந்த ருக்மணி மகளை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து சசிமோளின் கழுத்தில் இறுக்கினார். மகள் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். மகளை கொன்று விட்ட வேதனையில் ருக்மணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மகளும், தாயும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.