Trending News...

போலீசாரிடம் போதையில் இளம்பெண் ரகளை

திருமலை: ஐதராபாத் பிலிம் நகரில் காரை நிறுத்திய போலீசாரிடம் இளம்பெண் ரகளையில் ஈடுபட்டு தண்ணீர் பாட்டிலை வீசி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் மேற்கு மண்டல போலீசார், பிலிம் நகரில் இரவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி, அதனை ஓட்டி வந்த வாலிபரிடம் மது அருந்தி உள்ளாரா என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய இளம்பெண், போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இதை அங்கிருந்த பத்திரிகை நிருபர்கள் கேமராவில் பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், நிருபர்கள் மீது கற்களையும்,  போலீசார் மீது தண்ணீர் பாட்டிலையும் வீசி ரகளையில் ஈடுபட்டார். சுமார் 15 நிமிடம் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து கார் நம்பரை பதிவு செய்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.