Trending News...

தனியார் வகுப்புக்களுக்கு தடை. தனியார் வகுப்பு நிறுவனங்களின் நிலை..?

பாடசாலை நடைபெறும் நேரங்களில், வார நாட்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்

க.பொ.த உயர்தர பரீட்சையில் பாடசாலையின் ஊடாக இரு தடவைகள் மட்டுமே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகள் தோற்ற முடியும் என உயர் கல்வி அமைச்சு தீர்மானித்தது.

இருப்பினும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவதாக தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா? என்பது குறித்து ஆராய முடியும்.

தனியார் வகுப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இந்நிலையில் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.