பிள்ளைகள், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்த பெண்?

திருவனந்தபுரம் அருகே தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற மகள்கள், தாய், தந்தை உள்ளிட்ட 4 பேருக்கு ஒருவர் பின் ஒருவராக சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அருகே பினராய் பகுதியை சேர்ந்தவர்கள் 76 வயதான குஞ்சிகண்ணன், கமலா தம்பதியர். இவர்களது 28 வயது மகள் சவுமியா..!

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சவுமியாவிற்கு திருமணமான நிலையில், ஐஸ்வர்யா, கீர்த்தனா என்ற இரு மகள்கள் இருந்தனர். சவுமியா அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுடன் பழகியதை அவரது கணவர் கண்டித்துள்ளார். சவுமியா தொடர்பை துண்டிக்காததால் ஒரு கட்டத்தில் வெறுத்து போய் சவுமியாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

இதையடுத்து சவுமியா தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இளைய மகள் கீர்த்தனா மர்மமான முறையில் படுக்கையில் இறந்துகிடந்தார். அவர் உடல்நல குறைவால் இறந்துவிட்டதாக சவுமியா கூறினார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி சவுமியாவின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தொடர்ந்து மார்ச் மாதம் 7ம் தேதி சவுமியாவின் தாய் கமலாவும், ஏப்ரல் மாதம் 13ம் தேதி தந்தை குஞ்சி கண்ணனும் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து படுக்கை அறையில் இறந்தனர். இது அவர்களது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

உடல் நலக்குறைவால் இயற்கை மரணம் என்று கூறியதால், போலீஸ் விசாரணை இன்றி இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யாமலே அடக்கம் செய்யப்பட்டன. தொடர் மரணம் குறித்து அக்கம் பக்கத்தினர் கேட்ட போது, தங்கள் வீட்டு கிணற்றில் அமில தன்மை உள்ள தண்ணீர் இருந்ததாகவும், அதை குடித்ததால் மகள் மற்றும் பெற்றோர் இறந்து விட்டதாகவும் கூறி சமாளித்துள்ளார் சவுமியா. இவரது பேச்சு அக்கம் பக்கத்தினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 4 பேரின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக அக்கம் பக்கத்தினர், மற்றும் உறவினர்கள் தலச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில் அமிலதன்மை கொண்ட தண்ணீரால் தனக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி சவுமியா தலச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதையடுத்து தலச்சேரி டிஎஸ்பி ரகுராமன் தலைமையிலான போலீசார், செவ்வாய்கிழமை மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களிடம் விசாரித்த போது சவுமியா முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சவுமியாவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று பெண் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

திருமணமான சில வருடங்களிலேயே இளைஞர்களுடன் தனக்கு தவறான தொடர்பு இருந்து வந்ததாகவும், 6 வருடங்களுக்கு முன்பு தனது தவறான தொடர்பை நேரில் பார்த்துவிட்ட தனது இளைய மகள் கீர்த்தனாவுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும், கடந்த ஆண்டு இறுதியில் தனது நடத்தையில் சந்தேகம் கொண்ட மூத்தமகள் ஐஸ்வர்யாவையும், தாய் கமலாவையும் , இறுதியில் தந்தை குஞ்சி கண்ணனையும் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கொடூர கொலைகாரி சவுமியாவை போலீசார் கைது செய்தனர். மனைவியை பிரிந்து சென்றதால் அவரது கணவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

மேலும் சவுமியாவுடன் தொடர்பில் இருந்த அதே பகுதியை சேர்ந்த 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சவுமியாவின் செல்போன் மூலம் அவருடன் தொடர்பில் உள்ள மற்ற இளைஞர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தவறான உடல் சார்ந்த தேடல் கண்ணை மறைத்ததால் தான் பெற்ற இரண்டு மகள்களையும், தன்னை பெற்ற தாய், தந்தையையும் ஒரு பெண் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.