மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்..

ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் டீக்காராமன். இவரது 2-வது மனைவி ராதா. இவர்களது மகள் சங்கீதா (வயது 16). 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த ராதா, மகளுடன் கே.வேளூர் அருகே உள்ள ஒழலை கிராமத்தில் வசித்து வந்தார்.

சங்கீதா, கே.வேளூர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில், தாய் ராதா உடல்நலக்குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிளஸ் 1 தேர்வுகள் முடிந்ததையடுத்து மாணவி சங்கீதா 14-ந் தேதி தாழனூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில், மாணவி சங்கீதா நேற்று முன்தினம் ஒழலை கிராமத்தில் உள்ள வீட்டிற்கு தனியாக சென்றார். பிறகு தந்தை வீட்டுக்கு வரவில்லை. நேற்று காலை மாணவியின் அண்ணன், ஒழலை கிராமத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது, வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு சங்கீதா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மாணவி உடலில் ஆங்காங்கே பிளேடால் கிழிக்கப்பட்ட காயம் இருந்தன. ஆற்காடு தாலுகா போலீசார் மாணவி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை எஸ்.பி. பகலவன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைசெல்வன் நேரில் பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கே.வேளூரை சேர்ந்த டிப்ளமோ முடித்த ரஞ்சித் (23) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

மாணவி சங்கீதாவை அவர் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். ரஞ்சித், டிப்ளமோ முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்துள்ளார். பிறகு வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில், மாணவி சங்கீதாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நெருக்கமாக காதலித்துள்ளனர். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவின் வீட்டுக்கு ரஞ்சித் சென்றார். அப்போது, திருமணம் செய்து கொள்வது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித் சங்கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பிறகு, செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்றதாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார், ரஞ்சித்தை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.