மாமனார் வீட்டில் தகராறு. மருமகன் வெட்டிக் கொலை..

திருவட்டார் அருகே உள்ள வெண்டலிக்கோட்டைச் சேர்ந்தவர் ஜெயந்த்குமார் (வயது 34). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மலவிளை முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் நாயர் என்பவரது மகள் நிஷாவை (24) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு ஜெயந்த்குமார், மாமனார் வீட்டு அருகே குடிபெயர்ந்தார். தற்போது ஜெயந்த்குமாருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

மகிழ்ச்சியாக சென்ற ஜெயந்த்குமார்- நிஷா தம்பதியர் வாழ்க்கையில் திடீரென கள்ளக்காதல் என்ற புயல் வீசத் தொடங்கியது. நிஷாவுக்கும், அருமனை பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ஒரு லாரி டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி அவர்கள் தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்தனர்.

இதையறிந்த ஜெயந்த்குமார், மனைவி நிஷாவை கண்டித்தார். இதனால் நிஷா கடந்த மாதம் திடீரென கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். இதுபற்றி ஜெயந்த்குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி நிஷா காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் நிஷா, தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது. போலீசார் தேடுவதை அறிந்து நிஷாவும், அவரது கள்ளக்காதலனும் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். போலீசார் ஜெயந்த்குமாரையும் அங்கு வரவழைத்து விசாரித்தனர்.

அப்போது நிஷாவை தன்னுடன் வந்து விடும்படி கணவர் ஜெயந்த்குமார் மன்றாடினார். ஆனால் நிஷா, நான் யாருடனும் செல்ல விரும்பவில்லை. எனது தாயார் வீட்டுக்கே செல்கிறேன் என எழுதிக் கொடுத்து விட்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. மறுபடியும் கள்ளக்காதலனுடனேயே சென்று குடும்பம் நடத்தினார்.

நிஷா ஓடிப்போனது தொடர்பாக அவரது பெற்றோரை சந்தித்து ஜெயந்த்குமார் அடிக்கடி தகராறு செய்தார். நேற்று இரவும் அவர் நிஷாவின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை மணிகண்டன் நாயரிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த மணிகண்டன் நாயர், ஜெயந்த்குமாரை அரிவாளால் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ஜெயந்த்குமார் துடிதுடித்து இறந்தார்.

இதுபற்றி திருவட்டார் போலீஸ் நிலையத்தில் அந்த பகுதியினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஜெயந்த்குமாரை கொலை செய்த மணிகண்டன் நாயர், அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவ இடத்தில் ரத்தம் தோய்ந்த நிலையில் 2 கம்புகளும், ஒரு கல்லும் கிடந்தன. இந்தஆயுதங்களை கொண்டு ஜெயந்த்குமார் முதலில் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகே அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த கொலையில் மணிகண்டன் நாயரை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.