உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மந்திரவாதியின் ட்ரீட்மென்ட்: பேட்டரி, சாவி, ஊசிகளை தின்ற இளைஞருக்கு ஆபரேஷன்!

மந்திரவாதி சொன்னதற்காக, செல்போன் பேட்டரி, சாவி, வயர், கண்ணாடித் துண்டுகளை சாப்பிட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் அருகில் உள்ள பில்கிராம் பகுதியை சேர்ந்தவர் அஜய் திவிவேதி (42). இவருக்கு அடிக் கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ‘யாரும் சூனியம் வைத்திருப்பார்களோ?’ என்று அஜய்-க்கு சந்தேகம். இதையடுத்து மந்திரவாதி ஒருவரைப் பார்த்தார். ’நான் சரி பண்ணிடறேன். சொல்றதை எல்லாம் கேட்கணும்’ என்று கூறினார். சரி என்ற அஜய்க்கு தினமும் ஏதாவது ஓர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் மந்திரவாதி.

அதாவது மொபைல் போன், அதன் பேட்டரி, சாவிகள், வயர், கண்ணாடித்துண்டு,ஆணி, ஊசிம் ஆணி என ஒவ்வொரு நாளும் ஒன்றாகக் கொடுத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார். சொன்னது மந்திரவாதியாச்சே என்று நம்பி சாப்பிட்டார் அஜய். குடல், குப்பைக் கூடையானதால் வயிற்று வலி வந்தது. பயங்கரமான வலி ஏற்பட்டதும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரி சோதித்த டாக்டர்கள் ஸ்கேன் பண்ணுமாறு கூறினர். பண்ணினார். அதைப் பார்த்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி.

‘என்னய்யா இதெல்லாம், வயித்துக்குள்ள?’ என்று கேட்டனர். அப்போதுதான் மந்திரவாதி விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதையடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டு, குடலில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே கொட்டியுள்ளனர். ‘ஏம்பா, யாரு என்ன சொன்னாலும் கேட்டுருவியா?’ என்று டாக்டர்கள் கேட்க, அவர் மந்திரவாதி என்பதால் பயந்து போய் கேட்டேன் என்றார் அஜய். இந்தப் பதிலை கேட்டு நொந்து போன டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.