Trending News...

இலங்கையில் சிறுமியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய முச்சக்கரவண்டி சாரதி

15 வயதான சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல் – நாரம்மலை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது உறவு முறை மகள் ஒருவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு ஹோட்டல் ஒன்றுக்கு செல்வதாக சிறுமியின் உறவினர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் முறையற்ற மனைவி எனக் கூறப்படும் பெண்ணுக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதுடன், பெண்ணை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, முதல் முறையாக சிறுமியை அயல் வீட்டில் வசிக்கும் சந்தேகநபரும் அவரது முறையற்ற மனைவியும் இணைந்து கொஸ்வத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பல நபர்களுடன் சிறுமியை பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதுடன், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளதுடன் 4 ஆயிரம் ரூபா பணத்தையும் கொடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பணத்தை கொடுத்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.