வாழைச்சேனையில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

வாழைச்சேனை - நாசிவன்தீவு கிராமசேவகர் பிரிவில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

நாசிவந்தீவு கட்டுமுறிவு பாலத்தின் வாவிக்கரையில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வாவிக்கரை கண்ணா காட்டுப் பகுதியிலிருந்து துர்நாற்றாம் வீசுவதை அறிந்து குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது அந்த இடத்தில் சடலமொன்று கிடப்பதை பார்த்து இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் சடலத்திற்கு அருகிலிருந்து 2 கைத்தொலைபேசிகளும், பொதி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.