பாடசாலை மாணவர்களின் கொடூர தாக்குதல்! கொழும்பில் சக மாணவன் பரிதாபமாக மரணம்

மாணவர்கள் சிலர் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பாடசாலை மாணவன் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பிரதேச பாடசாலையின் பிரதான மாணவ தலைவனாக செயற்பட்ட 11 வகுப்பில் கல்வி கற்றும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இரவு இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பி வந்த மாணவனை, வீதியில் நின்ற மாணவர்கள் குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலினால் படுகாயமடைந்த மாணவன் சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு மாணவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஒரு மாணவன் மாத்திரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.