Trending News...

சிறுத்தையை அடித்துக் கொன்றவர்களைக் கைது செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு Share

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை அடித்துக் கொல்லப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற காணொலிப் பதிவை வைத்து அதனை அடித்துக் கொன்றவர்களைக் கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று இன்று (22) மாலை உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் நீதிமன்றில் இன்று முதல் அறிக்கை முன்வைத்தனர். அதனை ஆராய்ந்த கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது.

கிளிநொச்சி, அம்பாள்குளம், விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஆள்களற்ற காணிக்குள் உட்புகுந்த சிறுத்தை, மாடு கட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியது.

அதுதொடர்பில் கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் அசமந்த செயற்பாட்டால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. முற்பகல் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உள்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர்.

இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர்.

ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் கிராம மக்கள் பொல்லுகளுடன் சென்று பற்றைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சுற்றி வளைத்தனர்.

பற்றைக்குள் இருந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய பொது மக்களால் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டது.

சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலிஸார், கிராம அலுவலர் உட்பட பலர் இருந்தனர்.