Trending News...

மோசடி வழக்கில் கைதான பிரபல தமிழ் நடிகைக்கு பல்வேறு மோசடிகளில் தொடர்பா?

தமிழகத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகை அனிசாவின் கணவர், மேலும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளன.

சின்னத்திரையில் பிரபலமான நடிகை அனிசா, A.C எந்திரங்கள் வாங்கியதில் ரூ.37 லட்சம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் இருப்பவர் பூர்ணிமா என்கிற அனிசா(34). இவர் தனது கணவர் சக்திமுருகனுடன்(38) இணைந்து மின்சாதன பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனங்களுக்கு அனிசாவே பொறுப்பாளராகவும் இருந்து வந்ததால், வரவு-செலவு கணக்குகளை அவர் கையாண்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் A.C எந்திரங்களின் மொத்த விற்பனையாளரான பிரசாந்த் என்பவரிடம், அனிசா-சக்திமுருகன் தம்பதி A.C எந்திரங்களை வாங்கி விற்று வந்துள்ளனர்.

அவற்றில் 107 A.C எந்திரங்களுக்கான பணத்தை அவர்கள் பிரசாந்திடம் நேரடியாக கொடுக்காமல், காசோலையாக அளித்துள்ளனர். ஆனால், அந்த காசோலைகள் பணம் இல்லாததால் திரும்பி வந்ததால், இதுகுறித்து பிரசாந்த்குமார் பொலிசில் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அனிசாவையும், அவரது மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சக்திமுருகனின் தம்பி ஹரிகுமாரையும் பொலிசார் கைது செய்தனர். ஆனால், சக்திமுருகன் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், தலைமறைவான சக்தி முருகன் மீது யுவராஜ் என்பவர் எம்.ஜி.ஆர். நகர் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சக்தி முருகன் 25க்கும் அதிகமான கார்களை டிராவல் நிறுவனம் நடத்துவதாக கூறி வாங்கிவிட்டு, அதன் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சி நிறுவனங்களில் விற்பனை செய்வதாக வாங்கிய ஏராளமான தொலைக்காட்சிகளுக்கும் சக்திமுருகன் பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக, சென்னை வளசரவாக்கம் பொலிசில் மற்றொரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுக்காக குவியும் புகார்களால், இந்த மோசடிகளிலும் அனிசாவிற்கு பங்கு இருக்குமா என்கிற கோணத்தில் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.