பசியை தாங்கிக்கொள்ள முடியாமல் தாயை தாக்கிய 11 வயது சிறுவன்

பட்டினியை தாங்கிக்கொள்ள முடியாமல், கல்லொன்றில் தாயை தாக்கிய 11 வயதானமகனை பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளது. பசியை பொறுத்துக்கொள்ள முடியாமல், சுகவீனம் காரணமாக கட்டிலில் படித்திருந்த தன்னை தனது மகன் கல்லால் தாக்கியதாக தாய் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் கணவர், கொழும்பில் தொழில் புரிந்து வருகிறார். 11 வயதான மூத்த மகன் பாடசாலைக்கு செல்லாமல் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்து குடும்பத்தை பராமரித்து வருகிறார்.

கணவன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து கொடுக்கும் பணம் செலவுக்கு போதுமானதாக இல்லை என்பதால், மூத்த மகன் அக்கம், பக்கம் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் நாளாந்தம் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் தாய் செய்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மகன் வேலைக்கு செல்லவில்லை எனவும் தனது பசிக்கு ஏதாவது உண்ண கொடுக்குமாறும் தாயிடம் கேட்டுள்ளார். உணவு சமைக்க வீட்டில் எதுவும் இல்லை என கூறியதும் ஆத்திரமடைந்த மகன், கல்லை எடுத்து தாய் தலையில் தாக்கியுள்ளார்.

காயமடைந்த தாய், பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் கைதுசெய்யப்பட்ட மகன் நாளைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.