தமிழ் வைத்தியர்களின் சாதனை! குவியும் பாராட்டுக்கள்- படங்கள்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர்கள் இருவர் சத்திரசிகிச்சை குழுவுடன் இணைந்து பாரிய எலும்பு முறிவுக்காக செய்யப்படும் சத்திரசிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜவாஹிர், தரமுகாமைத்துவ வைத்தியர் டாக்டர் நவ்பல் ஆகியோரின் வழிகாட்டலில் எலும்பு சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் காண்டீபன்(VOS), பொது வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் பீ .கே இரவீந்திரன்(VS), மயக்க மருந்து வைத்தியர் டாக்டர் றுவினா(MOA) மற்றும் சத்திரசிகிச்சை குழுவுடன் இணைந்து பாரிய எலும்பு முறிவுக்காக செய்யப்படும்THR (Total Hip Joint Replacement ) சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

வைத்தியசாலையில், எலும்பு சத்திரசிகிச்சை மேற்கொள்ள போதியவசதி இல்லாத நிலையிலும் குறித்த சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளமை ஓர் வரலாற்று சாதனையாக கருதப்படுகின்றது

இதேவேளை, சேவைக்கு பங்களிப்பு செய்த வைத்திய அத்தியட்சகர், சத்திரசிகிச்சை நிபுணர்கள் ,சத்திரசிகிச்சை சிரேஸ்ட வைத்தியர்கள், மயக்க மருந்து வைத்தியர்கள், சிரேஷ்ட தாதிய பரிபாலகர், சத்திரசிகிச்சை தாதியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை சுகாதார உதவியாளர்கள் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும், வருடாந்த இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ள பொது வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் பீ.கே. இரவீந்திரனின் வருகைக்கு பின்னர் தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை செய்ய முயன்ற பல நோயாளர்கள் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

அவரின் மகத்துவமான சேவையினால் பாரிய வெற்றிகளை கண்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் தற்போது பாரிய சிகிச்சைகளுக்கான தொழிநூட்பங்களை கொண்டு வெற்றி கண்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்

இதேவேளை, இனிமேல் எலும்பு முறிவுக்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.