மஞ்சள் கோட்டில் வீதியை கடந்த மாணவன் வான் மோதி படுகாயம்- வீடியோ

காலி மாவட்டம் நெலுவ , தெமகம பாடசாலைக்கு அருகில் நடந்த வாகன விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவன் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது தந்தை வருவதை கண்ட மாணவன், வீதியின் இரண்டு புறத்தை பார்க்காமல் மஞ்சள் கடவை ஊடாக ஓடி செல்ல முயற்சித்த போது, மொரவக்க பிரதேசத்தில் இருந்து வந்த வானில் மோதுண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவனை பிரதேசவாசிகள் இணைந்து அருகில் உள்ள நெலுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மாணவன் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு செல்லும் ஒருவரை தெனியாயவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி அழைத்துச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றே மாணவன் மீது மோதியுள்ளது.விபத்து குறித்து நெலுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த போது அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வியில் பதிவான காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.