Trending News...

முகநூலில் அதிகரிக்கும் தற்கொலை நேரடி ஒளிபரப்புகள்…!!!

“நான் தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொன்னதை ஒருவரும் நம்பவில்லை. இதோ, நான் தற்கொலை செய்யப்போகிறேன் பாருங்க” என்று சொல்லி 22 வயதான இளைஞன் கேமரா முன்பு நின்று துப்பாக்கியால் சுட்டுக் கொண்டான். இந்த வீடியோ காட்சி 4 நிமிடங்கள் ஓடுகின்றன. இந்த தற்கொலை நடந்தது 2016-ம் ஆண்டு. ஃபேஸ்புக் ‘நேரடி ஒளிபரப்பு’ வசதியை அறிமுகப்படுத்திய ஆண்டும் இதுதான்.

இந்த தற்கொலைக்குப் பின் நேரடியாக பார்வையாளர்கள் முன் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் பூட்டிய வீட்டிற்குள் அமித் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பினார். இறந்தவரின் மனைவி வரும்வரை நேரடி காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

தற்கொலைக்கு முயல்பவர்கள் தன் தற்கொலையை நேரடியாக ஒளிபரப்புவதன் மூலம் அதிகமான பார்வையாளர்கள் முன் தன்செயலை நியாயப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு தற்கொலைக்கு முன்பும் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை தற்கொலைக்கு தள்ளியவர்களை பற்றியே பேசியிருக்கிறார்கள். எந்த சூழலில் தான் இப்படியொரு முடிவு எடுத்ததையும் விவரிக்கிறார்கள்.

சிலர் தன் தற்கொலைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமான காதலர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் முன் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 35 வயதான குர்ஜித் சிங் திலன் என்பவர் துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுக் கொண்டார். தற்கொலையை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தார். அந்த வீடியோவில் தன் அப்பாவின் சொத்தை ஏமாற்றிய மாமாவிடம் தனக்கான பங்கை கேட்கிறார். அவர் மறுத்ததும் தற்கொலை செய்து கொள்கிறார். இதேபோல் மற்றொரு சம்பவம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையை தன் காதலன் பார்க்கும் விதமாக ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிப்பரப்பினார்.

இந்த முறையில் தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் இவர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக இவ்விதமாக செயல்படுகிறார்கள். ஆக்ராவில் 24 வயதான பெண்ணொருவர் தன் தற்கொலையை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். இந்த வீடியோவை 2,750 பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த எவரும் காவல்துறைக்கோ அல்லது இறந்த பெண்ணின் வீட்டிற்கோ தகவல் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய செய்தி.

தற்கொலையை பார்க்கும் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் என்ன செய்வது என்பது தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மேலும், தன்னைப்போல் பார்க்கும் யாரேனும் ஒருவர் தகவலை சொல்லி காப்பாற்றி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு செயல்படுவார்கள். இதுவும் ஒருவிதமான கும்பல் மனநிலை என்கிறார்கள் உளவியலாளர்கள்.

உளவியலாளர்கள், ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்தபடி இறப்பவர்கள் உதவி கேட்டு அழுவார்கள். பார்க்கும் பார்வையாளர்கள் எவரேனும் வந்து காப்பாற்றி விடுவார்கள் என நினைத்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கமாலே இருப்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எந்தவொரு உதவியும் கிடைக்காமல் நம்பிக்கையின்றி தற்கொலை முயற்சியை செயல்படுத்திவிடுகிறார்கள் என்கிறார்கள்.

தற்கொலைக்கான எண்ணத்திலிருப்பவர்கள் தான் விரும்பும் அன்பான நபர்களிடம் பேசவேண்டும் என்கிறார்கள்.

வாழ்க்கையை குறித்த பாஸிடிவான விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது தற்கொலை மனநிலை மாறும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.