இன்று ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்: 13ம் தேதி 2.0 டீஸர் வருகிறது

ரஜினி ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாகிறது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக பட ரிலீஸ் பல காலமாக தள்ளிப் போய் தற்போது ஒரு வழியாக ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படத்தின் டீஸர் வரும் 13ம் தேதி வெளியிடப்படும் என்று ஷங்கர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று டீஸர் வெளியாகும் செய்தி அறிந்த ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்ஷய் குமாரும் டீஸர் வெளியீடு குறித்து ட்வீட்டியுள்ளார்.
எப்ப சார் டீஸரை வெளியிடுவீர்கள் என்று ரஜினி ரசிகர்கள் ஷங்கரிடம் கெஞ்சிப் பார்த்தார்கள், மீம்ஸ் போட்டார்கள். ஆனால் அவரோ தன்னை கலாய்த்து வரும் மீம்ஸ், ட்வீட்டுகளை கூட ரீட்வீட் செய்து ரசிகர்களை குழப்பினார். இந்நிலையில் தான் டீஸர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எந்திரன் படத்தை போன்றே இந்த படமும் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு பேட்ட என்று பெயர் வைத்துள்ளனர்.

ஒரே நாளில் ரஜினி ரசிகர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி லக்னோவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன், குரு சோமசுந்தரம், நவாசுத்தீன் சித்திக்கி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.