உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

திருமணமான 6 மாதத்தில் ஆணவக்கொலைக்கு இரையான கணவன்: இறுதி ஊர்வலத்தில் கண்கலங்க வைத்த காட்சி

தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரனய் என்ற 24 வயது இளைஞரின் இறுதி ஊர்வலம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

பிரனய் தாழ்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

பெற்றோரை எதிர்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவை அழைத்துக்கொண்டு பிரனய் மருத்துவமனைக்கு சென்றபோது, மாருதிராவ் ஏவிய கூலிப்படை நபர், பிரனயின் தலையில் தாக்கி கழுத்தில் வாள் போன்ற கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரனய்யை கொல்வதற்கு அம்ருதாவின் அப்பா 1 கோடி ரூபாய் கூலிப்படைக்கு தந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அம்ருதாவின் சிசுவை அழிப்பதற்கு மருத்துவருக்கும் பணம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மிர்யலாகுடாவில் பிரனயின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் முகம் தெரியாத பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தாங்களாக முன்வந்து கலந்துகொண்டனர். ‘பிரனய் அமர் ரஹே’, பிரனயை அழிக்க முடியும், காதலை அழிக்க முடியாது (பிரனய் என்றால் இந்தியில் காதல் என்று பொருள்) என்ற பதாகைகளுடன் ‘ஜெய் பீம்’ முழக்கங்கள் மிர்யலாகுடா பகுதியின் மூலை முடுக்குகளிலும் ஒலித்தன.

பிரனய் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பகுதியில் அம்ருத்தா அமர்ந்திருந்தது அனைவரது மனதையும் கலங்கவைத்தது.

இனி அம்ருதா எங்கள் மகள். அவளை எதற்காகவும் நாங்கள் விட்டுத்தரமாட்டோம். அம்ருதாவும் அவளின் குழந்தையும் இனி எங்களுடன் தான் இருப்பார்கள். அவளுடன் இருந்து பிரனய் கொலைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வமாகப் போராடுவோம் என பிரனயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அம்ருதா கூறியதாவது,

பிரனய் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால் என் குழந்தைக்காகவும், சாதிய முறைமையை எதிர்த்துப் போராடவும் உயிர் வாழ்வேன். இந்த வேதனையை யாரும் அனுபவிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.