Trending News...

ஏழ்மையால் இறுதியில் சோகத்தில் முடிந்த காதல் கதை

மதுரையில் காதலியின் ஏழ்மை நிலையைக் காரணம் காட்டி பெண்ணை அவரது காதலன் கழற்றிவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார். இவரும் மதுரை மாவட்டம் திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா என்ற இளம்பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இருவருமே பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.

இவர்களின் காதல் விஷயம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. ராம்குமாரிடம் அவரது பெற்றோர் சிந்துஜாவை வீட்டிற்கு அழைத்து வரச்சொன்னார்கள். சிந்துஜாவைப் பார்த்ததும் ராம்குமாரின் வீட்டாருக்குப் பிடித்துவிட்டது. இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் இதற்கு ராம்குமாரின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து ராம்குமாரின் பெற்றோர் சிந்துஜாவைப் பெண் கேட்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சிந்துஜாவின் வீட்டைப் பார்த்த அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். ஏனெனில், சிந்துஜா ஏழ்மைக் குடும்பத்தை சார்ந்த பெண்.

நான்கு வருடங்கள் காதலித்தபோதெல்லாம் சிந்துஜா ஏழைப்பெண் என்று தெரிந்து வைத்திருந்த ராம்குமார் அவரின் வீட்டைப் பார்த்ததும் சிந்துஜாவிடம் பழகுவதை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டார். இதனால், மனமுடைந்த சிந்துஜா தன் கையைப் பிளேட்டால் அறுத்துக் கொண்டு அதனை ராம்குமாருக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இதற்கு ராம்குமாரிடமிருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லை.

இதனால் மனவேதனையடைந்த சிந்துஜா விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவர் சாவதற்கு முன்பு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் ராம்குமாரையும், அவனது பெற்றோரையும் கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.

பெரும்பாலான காதலுக்கு ஜாதி மட்டுமே பெரிய தடையாக இருக்கும். ஆனால்,இந்தக் காதல் விவகாரத்தில் ஜாதியை பெரிய பொருட்டாகப் பார்க்காத ராம்குமாரும் அவனது பெற்றோரும் பணத்தை, அந்தஸ்தைப் பார்த்து ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரைப் பறித்து விட்டனர்.