தாய், தந்தையை கொலை செய்து தற்கொலை செய்த இளைஞர்

கடன் தொல்லையால் தாய், தந்தையை கொலை செய்து விட்டு டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் ஒருவர் பேசியுள்ளார். அவர் கூறுகையில் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பாலமுருகன், மனைவி லட்சுமி மற்றும் அவரது மகன் வைரமுத்து ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி தனக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது 2 பேர் கீழே ரத்த வெள்ளத்தில் சடலமாகவும் மற்றொருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்து 2 நாட்களாகியிருக்கலாம் என தெரியவந்தது.

விசாரணையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்கள் தனியார் பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் (55), அவரது மனைவி லட்சுமி (47) என்றும் தூக்கில் தொங்கியபடி இருந்தவர் அவர்களது மகன் வைரமுத்து (28) என்பதும் தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. டிராவல்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார்.

அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இதனால் வைரமுத்து தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்த பிறகு தனது பெற்றோரிடம் கடனை கேட்டு தொல்லைக் கொடுக்கக் கூடும் என்பதால் அவர்களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இதனால் தாய், தந்தையின் மணிக்கட்டில் கத்தியால் அறுத்துள்ளார். அதன்பிறகு அவர்களது கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். பின்னர் தனது மணிக்கட்டையும் அறுத்து கொண்டு ஒரு அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு கொண்டார்.

வைரமுத்து இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு தனது சொத்தின் ஆவணங்கள் மற்றும் எழுதி வைத்த கடிதம் வீடியோ பதிவு ஆகியவற்றை திருப்பூரில் உள்ள உறவினர் ஒருவருக்கு கூரியரில் அனுப்பியுள்ளார். அது உறவினருக்கு கிடைத்ததும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.