உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

புல்லு வெட்ட சென்றவரை கிணறு வெட்ட சொல்லி தலையை துண்டாடினார் முதலாளி!! மறைக்கப்படும் நீதியினால் தவிக்கும் குடும்பம்

கிணறு பதிக்கும்போது திடிரென ஏற்பட்ட விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏழைத் தொழிலாளியொருவர் பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் சம்மாந்துறை இறக்காமப்பிரதேசத்திற்கு மத்தியிலிருக்கும் நயினாகாட்டை அடுத்துள்ள குடியிருப்பு என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. தமண பொலிஸ் பிரிவுக்கும் அம்பாறை நீதிமன்ற பரிபாலனத்திற்கும் உட்பட்ட பிரதேசம் இது.

இந்தச்சம்பவம் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. அன்றுமாலை நீதிவான் வந்ததும் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டது.

மறுநாள் பூரணை. அன்று பிரேதபரிசோதனையோ விசாரணையோ இடம்பெறவில்லை. ஆதலால் நேற்று (25) சட்டவைத்தியஅதிகாரியின் சோதனை பிரேத பரிசோதனை மற்றும் பொலிசார் விசாரணையின்பின்னர் பிரேதம் விடுவிக்கப்படவிருந்தது.

அதன்படி (25) செவ்வாய்க்கிழமை பகல் 2.30மணியளவில் பிரேதம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை 5.30மணியளவில் முனைக்காட்டில் அடக்கம் செய்யப்படுகின்றது.


பலியானவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காட்டைச்சேர்ந்த 51வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவராவார். அவர் 1.10.1967இல் பிறந்தவராவார். இவருக்கு 3பெண்பிள்ளைகள் 1ஆண்பிள்ளையுண்டு.

முனைக்காட்டைச்சேர்ந்த இவர்கள் தொழில் நிமித்தம் வீரமுனைக்குவந்து 3வருடகாலம் தந்தையும் தாயும் கூலித் தொழில் செய்து பிள்ளைகளைக் காப்பாற்றிவருகின்ற வேளை இத்துயரசம்பவம் சம்பவித்துள்ளது.

அவரது திடீர் இழப்பால் இவ் ஏழைக்குடும்பம் ஆடிப்போயுள்ளது. அவரது மனைவி சூரியமலர்(வயது39) அவரது பிள்ளைகளான றேணுகா(வயது22) தினேசா(வயது20) சபேஸ்கா(வயது 17) கௌத்தம்(வயது2) ஆகியோர் அநாதைகளாக மாறியுள்ளனர்.

இந்த பரிதாபச் செய்தியை அறிந்ததும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவர்களது வீட்டிற்குச்சென்று ஆறுதல் கூறியதுடன் அடக்கத்திற்கான முழுச்செலவையும் பொறுப்பேற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் அங்கு கூறுகையில்: பிறப்பு தற்செயலானது இறப்பு நிச்சயமானது. நடந்தது நடந்துவிட்டது. ஆனால் அவரைக்கூலித் தொழிலுக்காகக் கொண்டுசென்றவர் அவரது மரணத்தின்பின்னர் நடந்துகொண்டவிதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதது.

ஏழையென்பதற்காக நீதி செத்துவிடக்கூடாது. சட்டம் மரணிக்கக்கூடாது. அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என்றார்.

பலியானவரின் மனைவி சூரியமலர்(39) கையிலே 2வயது கடைசி ஒரேயொரு மகனைக்கிடத்திவிட்டு அழுதழுது கூறுகையில்:

வெள்ளிக்கிழமை இரவு 7.30மணியளவில் சம்மாந்துறையைச்சேர்ந்த அந்த முஸ்லிம் முதலாளி கோல் எடுத்து நாளை காலை நயினாகாட்டிற்கு புல்லுப் புடுங்கச்செல்ல வேண்டும். கணவனை தயாராக இருக்கச்சொல் எனக்கூறினார். வழமைபோல நானும் ஓம் என்றேன்.

மறுநாள் சனிக்கிழமை காலை 7மணியளவில் சைக்கிளில் எனது கணவர் முதலாளியிடம் சென்றுள்ளார். அங்கிருந்து முதலாளி இவரை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நயினாகாட்டிற்குச்சென்றுள்ளார்.

நான் வழமைபோல 10அரை மட்டில் கணவருக்கு கோல் எடுத்தேன். பதிலில்லை.12மணிமட்டில் மீண்டும் கோல் எடுத்தேன். அப்போதும் பதில் இல்லை. எனக்கு மனதுக்குள் ஒருவித பயமும் வந்தது. ஆனால் பிள்ளைகளிடம் கூறவில்லை.

மாலை 4மணியளவில் அதே முதலாளி கோல் எடுத்து சந்திரன் நிக்கிறாரா? என்று கேட்டார். நீங்கள்தானே கூட்டிற்று போனது.என்னிடம் கேட்கிறதென்ன? என்று பதிலுக்குக் கேட்டேன்.

கிணற்றுக்கொட்டு பதிக்கும்போது அவர் மோசம் போயிட்டார் என்று அவர்கூறியதும் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அலறியடித்துக்கொண்டு நாம் மூவர் ஆட்டோவில் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காகச் சென்றோம்.

செல்லும் வழியில் ஒருவளைவில் ஆட்டோ தடம்புரண்டது. அதில் எனக்கு கையில் பல காயங்கள். இருந்தும் தொடர்ந்து சம்பவ இடத்திற்கச்சென்றுபார்த்ததும் எம்மை தூக்கிவாரிப்போட்டது.

கிணற்றுக்கொட்டுச்சுற்றவர தொம்பல் அதற்குள் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் எனது கணவர் புதையுண்டிருப்பதைக் கண்டேன்.

பின்பு அங்கு பொலிசார் கொரணல் நீதிவான் எல்லாம் வந்து இரவு 7மணியளவில் சடலத்தை அம்பாறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்றார்கள். இன்னும் சடலம் கைக்குக் கிடைக்கவில்லை என்றார்.

எனது 4பிள்ளைகளையும் அநாதையாக தவிக்க விட்டுச்சென்றுவிட்டார். நான் என்ன செய்வது ? என அழுதார்.

அடுத்த தவணை 10.10.2018இல் நடைபெறும் என பொலிசார் கூறினர்.

எனது கணவரையிழந்து நாம் நிற்கிறோம். நாம் ஏழைகள். சம்பந்தப்பட்டவர்கள் வந்து இதுவரை எம்மைப்பார்த்ததுமில்லை. உதவியதுமில்லை.

அவர்களுக்கு சட்டம் என்ன நடவடிக்கை எடுத்தது என்பது எமக்குத்தெரியாது. இந்த மரணத்திற்கு நீதிவேண்டும். என்றார்.