உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணியான விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியானது

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்கவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை உறவினர்களுக்கு விருப்பமான இடத்திற்கு சடலத்தை எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்வதாக உறவினர்கள் நீதிவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சடலம் நேற்று மாலை யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின் பெண்ணின் உடம்பில் எதுவித காயங்களும் இல்லை எனவும், நீரில் மூழ்கியமையினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் மயூரதன் தெரிவித்துள்ளார்.

தற்போது உயிரிழந்த விரிவுரையாளர் நடராசா போதநாயகியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மரணித்த விரிவுரையாளரின் சடலம் வவுனியாவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக விரிவுரையாளரின் சகோதரன் நடராசா தவராசா தெரிவித்துள்ளார்.