உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,234 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில், சுனாமி பாதிப்பைப் பயன்படுத்தி வீடுகளிலும், கடைகளிலும் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில், கடந்த வெள்ளிக்கிழமை 7.5 ரிக்டர் அளவுக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுலாவேசியில் பாளு நகரம் உள்ளிட்ட பகுதிகளை சுனாமி தாக்கியது. வழக்கத்துக்கு மாறாக, அலைகளின் உயரம் 20 அடிக்கும் அதிகமாக எழுந்ததால் அதன் பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும் அதன் தீவிரம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது. ராட்சத அலைகள் வாரிச் சுருட்டி வீசியதில், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட இரண்டு லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருவதாக ஐநா சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் குடிநீர், உணவு கிடைக்காமல் வாடி வருவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

பசி, பட்டினி நிலவுவதால் பல இடங்களில் பொதுமக்களே கடைகளை உடைத்து உணவு, பிஸ்கெட் போன்றவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். தற்போது, உணவு வரத்தொடங்கிய நிலையிலும், அதை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம்.களையும் உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொள்ளையர்களை கண்டதும் சுடுவோம் என போலீஸ் எச்சரித்திருந்தும், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனிடையே நேற்று 850 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 1,234 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு உதவியையும் ஏற்க இந்தோனேசியா தயங்குவதால் மீட்பு நிவாரணப் பணிகள் தேங்கியுள்ளன. இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், பாளுவில் இருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுலாவேசி தீவில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

பல இடங்களில், சேறும் சகதியுமாக இருப்பதால் மீட்புப் பணிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தோனேசியா வெப்ப மண்டலம் என்பதால் சடலங்கள் வேகமாக அழுகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.