உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

விடோஸ்டர்ன் ஏரியில், சகா வனசெக் என்ற சிறுமி இதனை கண்டுபிடித்தார்.

முதலில் இந்த வாள் 1000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் அருங்காட்சியத்தில் இருக்கும் நிபுணர்கள், இது 1500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்புகிறார்கள்.

வறட்சியின் காரணமாக, ஏரியில் தண்ணீரின் அளவு மிகக்குறைவாக இருந்ததினால் இந்த ஆயுதத்தை சகா கண்டுபிடித்திருக்கக்கூடும்.

"தண்ணீரில் திடீரென ஏதோ ஒன்றை உணர்ந்து, அதனை தூக்கிப் பார்த்தேன். அதற்கு கைப்பிடி இருந்தது. உடனே நான் போய் என் அப்பாவிடம் கூறினேன்" என ரேடியோ ஒன்றுக்கு சகா பேட்டி அளித்திருந்தார்.

தன் மகள் ஏதோ குச்சியோ அல்லது கிளையையோ தண்ணீரிலிருந்து வெளியே எடுத்ததாக நினைத்தேன் என்று சகாவின் தந்தை ஆன்டி வனசெக் இணையதளம் ஒன்றிடம் தெரிவித்தார்.

அவர் நண்பரிடம் அதனை காண்பித்து, நன்கு பார்க்குமாறு கூறிய பிறகே, இது பழமையான வாள் என்று தெரிய வந்ததாகவும் ஆன்டி கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட வாள் தற்போது கவனமாக பாதுகாக்கப்படுவதாக உள்ளூர் அருங்காட்சியம் தெரிவித்துள்ளது.

சகா, அந்த வாளை கண்டுபிடித்த பகுதியை மேலும் தோண்டி பார்க்க அருங்காட்சியம் மற்றும் உள்ளூர் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை இன்னும் முடியவில்லை என்றும் அங்கு பல பழமையான பொருட்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.