உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

16 வயது சிறுமியுடன் காதல்: ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்!

நாமக்கலில் வீட்டுக்குள் புகுந்து 16 வயது காதலியை சந்திக்க முயன்ற ஆட்டோ டிரைவரை உறவினர்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கள் மாவட்டம் பள்ளிப்பாளையம் பெரும்பாறையைச் சேர்ந்தவர் தர்மராஜ் (27). ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும், ஈக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால், பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால், பெண் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு காதலி அழைத்தாகக் கூறி, தர்மராஜ் தனது நண்பர் ஏழுமலையுடன் அவரது வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். அப்போது தர்மராஜ் வருவதைக் கண்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை தாக்க முயன்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து தர்மராஜூம், ஏழுமலையும் வெவ்வேறு திசையில் தப்பியோடினர். பின்னர், வெகுநேரமாகியும் ஏழுமலை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈக்காட்டூர் பகுதியில் தர்மராஜ் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜின் உறவினர்கள், அவரது இறப்புக்கு பெண் வீட்டாரே காரணம் என்றும், பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் தான் தர்மராஜை அடித்துக் கொலை செய்தனர் என்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலிசார், தர்மராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட தர்மராஜின் உறவினர்களை சமாதானம் செய்து, சந்தேகத்தின் பெயரில் பெண் வீட்டார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் தலை மறைவாகியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.