உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

கதவுக்கு முட்டுக்கொடுக்க விண்கல்லை 30 ஆண்டுகளாக பயன்படுத்திய நபர்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கதவு அசையாமல் இருப்பதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டுக்கொடுக்க பயன்படுத்தப்பட்ட கல் ஒரு விண்கல் என்று பேராசிரியர் ஒருவர் ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.

மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானவியல் பேராசிரியர் மோனா சிர்பெஸ்க்கு என்பவரிடம், தன்வசம் 30 ஆண்டுகளாக இருக்கும் கல்லின் தன்மையை ஆராயுமாறு கொண்டுவந்து கொடுத்துள்ளார் உள்ளூர்வாசி ஒருவர்.

சுமார் 10 கிலோ எடை உள்ள அந்தக் கல்தான் தன் வாழ்விலேயே ஆராய்ச்சிக்கு உட்படுத்திய மிகப்பெரிய விண்கல் என்று மோனா கூறியுள்ளார்.

1930களில் மிச்சிகனில் உள்ள எட்மோர் எனும் இடத்தில் இருக்கும் விளை நிலத்தில் வந்து விழுந்த அந்தக் கல்லின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்.

பெரும்பாலான விண் கற்களில் 90% முதல் 95% இரும்பு இருக்கும். ஆனால் இந்த விண்கல்லில் 88% இரும்பும் 12% நிக்கலும் இருப்பது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

"தொடக்க கால சூரிய மண்டலத்தின் ஓர் அங்கம் நம் கைகளில் கிடைத்துள்ளது," என்று பல்கலைக்கழகம் வெளியிட்ட காணொளி ஒன்றில் மோனா கூறியுள்ளார்.

தனது ஆய்வு முடிவுகளை உறுதி செய்துகொள்வதற்காக மோனா அந்தக் கல்லை வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் இன்ஸ்டிட்டியூட் எனும் புகழ்பெற்ற அறிவியல் மையத்துக்கு அனுப்பிவைத்தார்.

அது விண்கல்தான் என்று அந்த மையத்தினர் உறுதிசெய்ததுடன் அதை விலை கொடுத்து வாங்கவும் முன்வந்துள்ளனர்.

அந்தக் கல்லின் விற்பனைத் தொகையில் 10%-ஐ மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கவுள்ளதாக பெயர் வெளியிடப்படாத அதன் தற்போதைய உரிமையாளர் கூறியுள்ளார்.