உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ரயிலில் மோதி 61 பேர் பலி 🤔🤔🤔

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், தசரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியை காண, ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில், அவர்கள் மீது, அசுர வேகத்தில் வந்த ரயில் மோதி, 60 பேர் பலியாகினர்.

பஞ்சாபில், காங்.,கை சேர்ந்த, அமரீந்தர் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில், ஜோடா படாக் பகுதியில், ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில், தசரா பண்டிகை கொண்டாட்டம் நேற்று இரவு நடந்தது.இதில், ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உற்சாகத்தில் இருந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். மக்கள் வெள்ளத்தால், அந்த பகுதி நிரம்பி வழிந்ததால், அவர்களில் ஒரு பகுதியினர், தண்டவாளங்களில் நின்றிருந்தனர்.

அப்போது, தண்டவாளத்தில் உள்ளூர் ரயில், எச்சரிக்கை ஒலியை எழுப்பியபடி, அசுர வேகத்தில் வந்தது. பட்டாசுகள் வெடித்ததால், ரயிலின் எச்சரிக்கை ஒலி, அவர்களுக்கு கேட்கவில்லை.சில நொடிகளில், அந்த பகுதியை கடந்த, அந்த ரயில், தண்டவாளம் மீது நின்றிருந்தோரை நசுக்கி தள்ளியபடி சென்றது.

இந்த துயர சம்பவத்தில், 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தசரா பண்டிகையின்போது நடந்த இந்த சோக சம்பவம், நாடு முழுவதும் மக்களிடையே, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.விபத்து நடந்த பகுதியில், தசரா பண்டிகை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, காங்கிரசார் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினராக, காங்கை சேர்ந்த, பஞ்சாப் சுற்றுலாத் துறை அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி, நவ்ஜோத் கவுர் அழைக்கப்பட்டிருந்தார்.

அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து, 'டுவிட்டர்' சமூக தளத்தில், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், 'அமிர்தசரசில் நடந்த ரயில் விபத்து சம்பவம், ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது; இது, இதயத்தை உலுக்குவதாக அமைந்துள்ளது' என, கூறப்பட்டுள்ளது.

ரயில் விபத்து சம்பவம் நிகழ்ந்த பஞ்சாப் மாநில அரசுக்கு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநில உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோரிடம் பேசி, தகவல்களை கேட்டறிந்தார். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.