உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு. பத்திரிகையாளருக்கு நடந்த கொடூரம்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

சவுதியைச் சேர்ந்த ஜமால் பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப் பறந்தவர். சவுதியில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு அதிமுக்கிய செய்திகளைக் கொடுத்தவர். ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு மற்றும் ஒசாமா பின்லேடனின் எழுச்சி, பல்வேறு சவுதி செய்தி நிறுவனங்களுக்காக ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு செய்தது, ஒசாமா பின்லேடனின் எழுச்சி போன்ற செய்திகளை சவுதி மக்களுக்கு கொண்டு சேர்த்தது ஜமால்தான். ஆரம்பத்தில் சவுதி அரசு பற்றி பாசிடிவ் செய்திகளை எழுதி வந்த ஜமால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கைக்கு ஆட்சி சென்றதும், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

சவுதியில் அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2017-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அமெரிக்காவில் பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) நிறுவனத்தில் இணைந்தார். சவுதி அரசை விமர்சித்து எழுதத் தொடங்கினார். குறிப்பாகச் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானை கடுமையாக விமர்சித்து எழுதினார்.

இதனிடையே ஜமாலுக்கு துருக்கியைச் சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஜமால் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஹெயிஸை திருமணம் செய்ய வேண்டும் என்றால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் விவாகரத்து பெற்றுவிட்டதற்கான தரவுகளைப் பெற வேண்டும். எனவே, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றார். ஆனால், அன்று வேலை முடியவில்லை.

ஜமாலை வேறொரு நாள் வருமாறு கூறி அனுப்பிவிட்டனர். இதையடுத்து அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்கு மதியம் 1 மணியளவில் சென்றார். அவருடன் அவரின் காதலி ஹெயிஸும் சென்றிருந்தார். ‘உள்ளே மொபைல் போன்கள் எடுத்துச் செல்லக்கூடாது. `என் மொபைல் போன்களை நீ பத்திரமாக வைத்துக்கொள். நான் ஒரு வேளைத் திரும்பி வரவில்லை என்றால் துருக்கி பிரதமரின் ஆலோசகருக்குத் தகவல் கொடு’ என்று கூறிவிட்டு தூதரக அலுவலகத்தினுள் சென்றார். உள்ளே சென்று 10 மணி நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. தூதரகத்தில் வெளியே தவிப்புடன் ஹெயிஸ் காத்துக்கொண்டிருந்தார். கடைசி வரை ஜமால் வெளியே வரவேயில்லை.

ஜமால் மாயமானதின் பின்னணியில் மிகப்பெரும் சதியிருப்பதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. `தூதரக அலுவலகத்தினுள் சென்ற ஜமாலை, சவுதி ஏஜென்டுகள் சிலர் கொடூரமாக சித்ரவதை  செய்து கொலை செய்துள்ளனர்’ என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், துருக்கி ஊடகங்கள் சில ஜமால் சித்ரவதை செய்து கொல்லப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டன. ஜமால் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, விரலைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி கூறிவந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் ஜமால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். ‘இந்த விவகாரத்தில் சவுதி அரசு ஆட்களை ஏவி ஜமாலைக் கொலை செய்த தகவல் உறுதியானால்  கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று சவுதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். உலக நாடுகளும் சவுதிக்கு கண்டனம் தெரிவித்தன. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்த சவுதி, அமெரிக்காவின் எச்சரிக்கையால் மேலும் கடுப்பானது. `எங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுவீர்களா. அப்படி நடந்தால் மிகக் கடுமையான எதிர்வினையை உலக நாடுகள் சந்திக்க நேரிடும்’ என்று தெரிவித்தது. அமெரிக்க பத்திரிகையாளர்களும் ஜமாலின் உறவினர்களும் சவுதி தூதரக அலுவலகத்துக்கு எதிரே போராட்டத்தில் குதித்தனர்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் சவுதியும் சமரசம் செய்துகொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் ட்ரம்ப் அரசை விமர்சித்தன. ஜமால் விவகாரம் தொடர்பாக சவுதி இளவரசரிடம் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார். பின்னர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சவுதி இளவரசரைச் சந்திக்க ட்ரம்ப் அனுப்பி வைத்திருக்கிறார். அந்த சந்திப்பு நடந்த அன்று அமெரிக்காவுக்கு சவுதி அரசு 700 கோடி ரூபாய் உதவி நிதியாகக் கொடுத்திருக்கிறது. அதாவது சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டதாக இரு நாடுகளும் விளக்கம் கொடுத்தன. இந்தத் தகவலைக் கண்டறிந்த  நியூயார்க் டைம்ஸ் போன்ற அமெரிக்க  ஊடகங்கள் சீற்றமடைந்தன. ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளதையே ட்ரம்ப் மறந்துவிட்டாரா. சவுதியிடம் பணம் பெறும் நேரமா இது’ என கடுகடுத்தன.
குடும்பத்துடன் ஜமால் 

அமெரிக்கா - சவுதி பிரச்னைகள் ஒருபுறம் இருக்க துருக்கி பத்திரிகைகள் தொடர்ந்து ஜமால் விவகாரத்தைப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்ட வண்ணம் இருந்தன. துருக்கி அரசு பத்திரிகையான யேனி சபாக்  ``எங்களுக்குக் கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள்படி, சவுதி அரேபியா தூதரகத்தில் ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இறுதியாக அவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டில் அவரின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம்’ என்று செய்தி வெளியிட்டது. மேலும், ஜமால் தூதரக அலுவலகத்துக்கு வந்த அன்று சவுதியில் இருந்து 15 பேர் வெவ்வேறு தனியார் ஜெட் விமானங்களில் துருக்கிக்கு வந்துள்ளனர். அன்றைய தினமே அவர்கள் மீண்டும் சவுதிக்குச் சென்றுவிட்டனர். அவர்களின் பெயர்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் துருக்கி அறிவித்துள்ளது. இறுதிவரை அவருக்கு என்ன நேர்ந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. சர்வதேச அரங்கில் சவுதிக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.