Trending News...

80 நாடுகள்... சர்காரின் வியக்கவைக்கும் புதிய சாதனை!

சர்கார் சுமார் 80 நாடுகளில் 1200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. அதுமட்டுமின்றி இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய அரசியல் பேச்சு இந்தப் படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படம் ரூ. 200 கோடி வரை வியாபாரத்தில் சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப் போலவே சுமார் 80 நாடுகளில் 1200 திரையரங்குகளுக்கும் மேலாக சர்கார் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கான வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ஏபி குரூப்ஸ் மற்றும் டி ஃபோக்கஸ் நிறுவனம் இதனை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி போலந்து, மெக்சிகோ, நியூசிலாந்து, உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் சர்கார் படத்தை வெளியிட உள்ளனர்.

இதற்கு முன்னதாக வெளியான விஜய் படங்களை ஒப்பிடுகையில், சர்கார் படம் உலக நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.