உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

ஏ9 வீதியில் வாகனங்களை மறித்து பணம் கோரி மிரட்டல்.

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக வாகனங்களை பொல்லுகளை காட்டி நிறுத்தி பணம் கேட்டு அச்சுறுத்தல் விடுத்தவர்களில் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதனால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக மக்கள் திரண்டனர். வாகன நெரிசலும் ஏற்பட்டது.

.கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நின்ற கும்பல் ஒன்று ஏ9 நெடுஞ்சாலை வழியாகச் சென்ற வாகனங்களை வழிமறித்து சண்டித்தனத்தில் ஈடுபட்டது. பொல்லுகளுடன் அந்தக் கும்பல் நின்றதால் வாகனத்தில் சென்றவர்கள் நிறுத்தினர்.

அவர்களை மிரட்டி அந்தக் கும்பல் பணம் கோரியது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இருவரை மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் பொலிஸ் உத்தியோகத்தரை தள்ளி நிலத்தில் சரித்துவிட்டு தப்பித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மதுபோதையிலிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் மக்கள் கூடினர். வீதியால் பயணித்த வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டதால் ஏ9 நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் கடமையிலிருந்த கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸாரிடம் வாகன சாரதிகள் சிலர் சென்று முறையிட்டனர்.

எனினும் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடுமாறு போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் இந்தச் செயலால் சாரதிகள் பெரும் விசமடைந்தனர்.

இதேவேளை, இவ்வாறு பணம் கேட்டு மிரட்டும் கும்பல்களின் அடாவடி அண்மைக்காலமாக அந்தப் பகுதியில் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.