Trending News...

யாழ் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்….!!

இலங்கைத் தீவினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் தனிப்பெரும் கல்விக் கழமாகத் திகழும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சைவமும் தமிழும் காக்க இற்றைக்கு 128 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இலட்சியக் கனவுடன் பயணித்து வருகின்றது.

இங்கு ஒரு விடயம் ஆரம்பிக்கப்பட்டால் அது அனைவருக்குமே முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டு மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றமை நிதர்சனமான உண்மை.அந்த வகையில் யாழ் மண்ணின் கல்வி, சமயப் பாரம்பரியத்தினை கட்டிக்காக்கும் பெரும் பொறுப்பு யாழ் இந்துக் கல்லூரி சமூகத்திற்கு உண்டு.

கல்லூரியானது தமிழ் மொழி சார் பற்றினையும்; சுதேசிய உணர்வு மிக்க பற்றாளர்களையும், சமயம் சார் பற்றாளர்களையும் உருவாக்கிய வண்ணம் உள்ளது.இந்த வரலாற்றுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இடம்பிடித்துக் கொள்கின்றது யாழ் இந்துவில் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம்.

சைவ சமயத்தவர்களின் முழு முதற்கடவுளாகிய சிவபெருமானினை வழிபடும் முறைகளில் முதன்மையானது லிங்க வழிபாட்டு முறைமை. பல தரப்பட்ட புறச் சூழல் காரணிகளால் லிங்க வழிபாட்டு முறைமை இல்லாமல் போகும் தருணத்திலுள்ளது.இவ்வாறான சூழ் நிலையில் பாடசாலை வளாகத்தினுள் சிவலிங்கம் அமைத்து; மாணவர்களை நீர் ஊற்றி; மலர் தூபி வழிபடக் கூடிய வகையில் வகை செய்துள்ளமை எமது சமயப்பாரம்பரியத்தினை அடுத்த சந்ததியினருக்கு ஊடு கடத்தி இருப்பினைத் தக்கவைக்க மேற்கொள்ளும் முன்போக்குவாத சிந்தனையாகவே நோக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டப வாயிலில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மேடையில் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.குறித்த சிவலிங்கம் ஆனது அறிவினை விருத்தி செய்ய உதவும் வகையில் “ஞானலிங்கமாக” ஸ்தாபிக்கப்பட்டு, ஞானலிங்கேஸ்வரராக பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

21.10.2018 ஞாயிற்றுக் கிழமை அன்று ஞானலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு எண்ணெய் காப்பு செய்யும் நிகவும் குறித்த தினமே நடைபெற்றது, தொடர்சியாக 22.10.2018 திங்கட்கிழமை அன்று மகா கும்பாபிசேகம் சிறப்பான முறையில் கல்லூரி அதிபர் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.

மகா கும்பாபிசேக நிகழ்வுகள் சாகித்ய சிரோன்மணி யாழ் நயினை சிவஸ்ரீ. வை.மு.ப. முத்துக்குமாரசாமி சிவாசாரியாரினால் மேற்கொள்ளப்பட்டது.கும்பாபிசேகத்திற்கான இன்னிசை நிகழ்வினை நாதஸ்வரகான வினோத ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களின் குழுவினர் வழங்கியிருந்தனர்.


தற்பொழுது யாழ்ப்பாணம் மாணவர் சமூதாயம் ஒழுக்க நெறி பிறழ்வுகளுக்கு உட்பட்டு, கவனக் கலைப்பான்களின் அடிமைப்படுத்தலுக்கு உள்ளாகிவருகின்றமை நிதர்சனமான உண்மை.அவற்றை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டும் போதாது, அவை மீண்டும் ஏற்படாத வகையில் எமது வாழ்வியல் ஊடாக சைவ சமய கோட்பாடுகளை ஊடுகடத்தும் ஓர் கருவியாகவே இந்த ஞானலிங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான மன அமைதி மற்றும் மன ஒருமைப்பாட்டினை உருவாக்கும் வகையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஆவன செய்யப்படும். மற்றும் தமிழ் மொழி மூலமான பூசை வழிபாடுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்லூரி அதிபர் திரு.சதா. நிமலன் அவர்கள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறன முற்போக்கு சிந்தனைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலிருந்து உருவாகின்றமை சிறப்பான விடயமாகும்.வட கிழக்கு பிரதேசங்களை பொறுத்த வரையில் பெளத்த ஆதிக்கத்தின் ஊடாக புத்தர் சிலைகள் உருவாக்கப்படுகின்றது என்ற கருத்து அனைவரினாலும் முன் வைக்கப்படுகின்ற போதிலும் எமது மத அடையாளச் சின்னங்களை அமைக்கவோ, உருவாக்கவோ முன்வருகின்றமை அரிதிலும் அரிது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட சிவலிங்கத்தினை முன்மாதிரியாகக் கொண்டு ஈழத்தில் பல இடங்களில் சைவ சமய அடையாளச் சின்னங்கள் உருவாக்கப்படவேண்டும்; எமது இருப்பினை தக்கவைக்க எமது அடையாளங்களுங்கான முக்கியத்துவத்தினை வழங்க முன்வரவேண்டும்.