உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

` கல்லறையில் காதலை வெளிப்படுத்திய ஜெசிகா! ' - கலங்கவைத்த போட்டோகிராஃபி

இளம் பெண் ஒருவர், தன் காதலர் நினைவாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்ப்பவர்கள் மனதை உருக்கும் விதமாக உள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள இண்டியானா என்ற மாகாணத்தைச் சேர்ந்த ஜெசிகா பாட்கெட் (Jessica Padgett) என்ற இளம் பெண், தன் திருமண நாளன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரை கண்கலங்கவைத்துள்ளது. தீயணைப்பு வீரரான கெண்டல் முர்பே (Kendall Murphy) ஜெசிகா ஆகிய இருவரும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம், வேறொரு தீயணைப்பு வீரர் மது அருந்திவிட்டு கெண்டல் மூர்பே வாகனத்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக கெண்டல் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், இருவருக்கும் திருமணம் என முடிவுசெய்யப்பட்டிருந்த அன்றைய தினத்தில், அவரின் காதலி ஜெசிகா திருமண உடையணிந்தபடி தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திருமண ஏற்பாட்டுடன் கெண்டலின் கல்லறைக்குச் சென்று, அங்கு மலர்கள் வைத்து தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை லவ்விங் லைஃப் போடோகிராஃபி (Loving life Photography) என்ற புகைப்பட நிறுவனம், கெண்டல் உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் இருவருக்கும் எப்படி திருமணம் நடைபெற்றிருக்குமோ, அவ்வாறே புகைப்படமெடுத்துள்ளது. இதைக் கடந்த 5-ம் தேதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கெண்டல் பயன்படுத்திய ஷூவில் மலர்கள் வைத்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படம், ஜெசிகாவுக்கு அருகில் கெண்டல் புகைப்படம், அவரின் கல்லறையில் மண்டியிட்டு இருக்கும் ஜெசிகா, கெண்டலின் உடைகளுடன் இருக்கும் ஜெசிகா போன்ற புகைப்படங்கள் மனதைக் கனமாக்குகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, ஜெசிகாவுடன் நிழலாக நிற்கும் கெண்டல் போன்ற புகைப்படம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் உள்ளது. 

இந்தப் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பையும் கண்ணீரையும் பெற்றுள்ளது. எவ்வளவு ஆழமான காதல், ஜெசிகாவின் காதல் சிறந்தது போன்ற பல கேப்சன்களுடன் பலரும் இதைப் பகிர்ந்துவருகின்றனர்.