Trending News...

யாழில் வீடு புகுந்து உறக்கத்திலிருந்த கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதல்.

யாழில் இன்று அதிகாலை வீடு புகுந்த வாள்வெட்டுக் கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவி மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

நுளம்பு நெற்றிற்குள் உறக்கத்திலிருத்த இருவரையும் வாளால் வெட்டியதுடன், இழுத்து வந்து ஒருவரை வீதியிலும் மற்றையவரை பற்றைக்குள்ளுமாக வீசிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

இச் சம்பவமானது வடமராட்சி குடத்தனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மேசன் தொழிலாளியான எம்.சித்திரவடிவேல் (வயது-50) என்பவரும் அவரது மனைவி ஜெயந்தி (வயது -40) ஆகிய இருவரும் படு காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் உறக்கத்திலிருந்த கணவன், மனைவியை கொடூரமாக வாளால் வெட்டிச் சாய்த்தது. அவர்களது மகள் ஒருவர் வேறு அறையிலும் மற்றொரு மகள் தொலைவில் உள்ள பேத்தியாரின் வீட்டிலும் இருந்ததால் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.

வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 24ஆவது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். மனைவிக்கு தலை, மற்றும் நெற்றி பகுதியில் மண்டை ஓடு உடைந்து ஆழமான வெட்டு ,மற்றும் அடிகாயங்கள் காணப்படுவதால் அவருக்கு சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.