உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

மன்னாரில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் முறுகல்.

மன்னார் முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற் கம்பிகளால் வீதியை இடை மறித்து அடைத்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது.

எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களின் எதிர்ப்பை அடுத்து படையினர் வீதியை திறந்துவிட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணிகளுக்குள் சென்றுவரும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த காணி பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியை நேற்று சனிக்கிழமை தொடக்கம் கடற்படையினர் இடைமறித்து முட் கம்பிகளால் மூடி, மக்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வந்துள்ளனர்.

இதன் தொடரச்சியாக முள்ளிக்குளம் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பலியை நிறைவுசெய்து, மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் வீதியை இடைமறித்து முட்கம்பி வேலிகளால் அடைத்துள்ளனர்..

இதனால் கடற்படையினருக்கும் முள்ளிக்குளம் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள் முள்ளிக்குளம் பகுதிக்கு தற்செயலாக சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து மூடியிருந்த வீதியை கடற்படையினர் திறந்ததாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் லியோ தெரிவித்தார்.